Sunday, November 22, 2015

கைசிக ஏகாதசி

நவதிருப்பதியில் ஒன்றான திருக்குறுங்குடி - வைஷ்ண திவ்ய தேசங்களில் மிகவும் சிறந்த தலமாக கருதபடுகிறது. ஸ்ரீமன் நாராயணனை துதிப்பவர்கள் எல்லோருமே வைஷ்ணவர்கள்தான் இதில் உயர்வு தாழ்வு பார்ப்பதில்லை நம் திருக்குறுங்குடி நம்பி பெருமாள். ஆம் இந்த ஸ்தலத்தில் நடந்த ஒரு மனதை நெகிழ செய்யும் ஒரு சம்பவம் இன்றும் திருவரங்கத்தில் அரங்கனின் சன்னதியில் கைசிக ஏகாதசி அன்று படிக்கப் படுகிறது என்றால் அது எப்பேர்பட்ட நிகழ்ச்சி. வாருங்கள் என் அருமை சகோதர சகோதரிகள் நிகழ்ச்சிக்கு போவோம்.நம் பாடுவான் என்பவன் நல்ல கவி திறன் கொண்டவன். திருகுறுங்குடி நம்பி பெருமாளை பற்றியே பாடுவான். நம்பி பெருமாளை பாடுவதையே மூச்சாக கொண்டவன். அவன் தாழ்த்த பட்ட குலத்தில் பிறந்ததால் அன்றைய காலக்கட்டத்தில் அவனுக்கு கோயிலுக்கு செல்ல அனுமதியில்லாமல் இருந்தது. ஆனால் அவனுக்கு அதைப் பற்றி துளியும் வருத்தமில்லை. கோயிலின் வாசலில் நின்று அன்றாடம் பெருமாளை போற்றி பாடுவான். கோயிலின் வாசலிலிருந்து பகவானை பார்க்க முடிய வில்லை. கொடிமரமும் தடுக்கிறது. என்னால் பெருமாளை பார்க்கமுடியவில்லை என்றாலும் பெருமாள் என்னை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். என் பண்களை (பாடல்களை) எல்லாம் அவன் காதாரக் கேட்டுகொண்டிருக்கிறான் அது போதும் என்ற திருப்தியுடன் வாழ்க்கையை நடத்திவந்தான். கைசிகம் என்ற பண்ணில் நம்பியின் புகழை பாடி மகிழ்வான்.

நம் பாடுவான் தினமும் விடி காலையில் ஸ்நானம் செய்து பிரம்ம முஹுர்த்தத்தில் கோயிலின் வாயிலுக்கு சென்று பெருமாள் பேரில் பண் இசைத்து அவரது பெருமைகளை பாடுவான். இவனது பெருமையையும் பிரதிபலன் கருதா பக்தியையும் ஸ்ரீ வராஹ பெருமான் பூமிபிராட்டியாரிடம் ஸ்லாகித்து சொல்கிறார் என்றால் அந்த நம் பாடுவான் எப்பேர்பட்ட பக்தனாக இருந்திருப்பான். இந்த மகாத்மியம் கைசிக புராணம் என்ற நாமம் தாங்கி வாராஹ புராணத்தில் உள்ளது.

ஒரு கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி இரவு அன்று நம்பாடுவான் திருக்குறுங்குடி நம்பி பெருமாள் கோவிலை நோக்கி செல்கிறான். அந்த இரவு நேரத்தில் அவன் செல்லும் வழியில் ஒரு ப்ரம்மரக்ஷஸ்(பிசாசு) அவனை வழி மறித்து அவனை பிடித்துக் கொள்கிறான். ப்ரம்மரக்ஷஸின் தேகமோ கொழுத்து பெருத்த தேகம். நம் பாடுவானோ மிகவும் இளைத்து மெலிந்த தேகம் உடையவன். அதனால் ப்ரம்மரக்ஷஸின் பிடியிலிருந்து தப்ப இயலாதவனாக இருந்தான். ஆனால் பயப்படவில்லை. ப்ரம்மரக்ஷஸை பார்த்து, "நான் ஏகாதசி விரதமிருந்து நம்பெருமாளை துதிக்க சென்று கொண்டிருக்கிறேன் என்னை விட்டு விடு என் விரதத்திற்கு பங்கம் செய்து விடாதே என்று கெஞ்சினான்.

ஆனால் ப்ரம்மரக்ஷஸ் நம்பாடுவானை நோக்கி நான் பத்து நாட்களாக கொலை பட்டினியாக இருக்கிறேன். ஆகவே எனக்கு இப்போது தெய்வாதீனமாக கிடைத்த உன்னை நான் விடுவதாக இல்லை. உன்னை கண்டிப்பாக புசிக்கப் போகிறேன் என்று கூறியது. தனது நிலையை உணர்ந்தான். ஆம் தன்னை மரணம் சூழ இருப்பதை புரிந்துக் கொண்டான் நம்பாடுவான். உடனே ப்ரம்மரக்ஷஸை பார்த்து நடக்க இருப்பதை தவிர்க்க முடியாது. நான் உனக்கு உணவாகப் போவதை பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் எனது இந்த அற்புதமான விரதத்தை அதாவது கோயிலின் வாசலில் வீணையை மீட்டி எனது நம்பி பெருமாளை பண்ணிசைத்து திருப்பள்ளி எழுச்சி பாடி எனது விரதத்தை முடித்து விட்டு வருகிறேன் பிறகு நீ உன் இஷ்டம் போல் என்னை புசித்துக் கொள் என்று வேண்டினான். அதற்கு ப்ரம்மரக்ஷஸ் பலமாக சிரித்து, "நீயோ தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவன், உன்னால் கொடுத்த வார்த்தையை காப்பாற்ற முடியாது. நீ என்னிடமிருந்து தப்ப பொய் சொல்கிறாய்; மேலும் நீ திரும்பி இந்த வழியே வராமல் வேறு வழியில் சென்று தப்பிவிடுவாய்.

அதற்கு நம் பாடுவான் பதினெட்டு விதமான ப்ரதிக்ஞைகளை செய்கிறான்.

நான் திரும்ப வரவில்லை என்றால் :

1சத்தியம் தவறியவர்களுக்கு என்ன தண்டனையோ அந்த தண்டனை எனக்கு கிடைக்கட்டும்.

2.பிறன் மனைவியை அடைவதால் ஏற்படும் பாவம் என்னை அடையட்டும்

3.எவன் ஒருவன் சாப்பிடும் போது தன்னுடன் சாப்பிடுகிறவனுக்கு பந்தி வஞ்சனம் செய்கின்றானோ அந்த மாதிரியான பாவம் என்னை அடையட்டும்

4.எவன் ஒருவன் பிராமணனுக்கு பூமி தானம் செய்துவிட்டு அதை திரும்பவும் அபஹரிக்கிறானோ அவன் அடையும் பாவத்தை நான் அடைவேன்.

5. எவன் ஒரு பெண்ணை யவன காலத்தில் அவளை அனுபவித்து விட்டு பின்பு ஏதாவது ஒரு தோஷத்தை சொல்லிவிட்டு அவளை கைவிடுவானாகில் அவன் அடையும் பாவத்தை நான் அடைய கடவேன்.

6.எவன் அமாவாசை பௌர்ணமி நாட்களில் தன் பத்தினியுடன் சேருகிரானோ அதனால் என்ன பாவம் வருமோ அந்த மாதிரியான பாவம் என்னை வந்தடையட்டும்.

7. எவன் ஒருவன் பிறருடைய அன்னத்தை நன்றாக புசித்துவிட்டு அவனையே தூஷிக்கின்றானோ அவனது பாவம் என்னை அடையட்டும்.

8. எவன் ஒருவன் பெண்ணை திருமணம் செய்து கொடுப்பதாக வாக்களித்துவிட்டு பிறகு எதோ சாக்கு போக்கு சொல்லிவிட்டு கொடாமல் இருக்கிறானோ அவனது பாவத்தை நான் அடைவேன்.

9. எவன் சஷ்டி, அஷ்டமி, சதுர்த்தசி அமாவாசை திதிகளில் ஸ்நானம் பண்ணாமல் புசிக்கிரானோ அவனது பாவத்தை அடைவேன்.

10.ஒரு பொருளை தானாமாக கொடுப்பதாக கூறி பின் மறுக்கிறானோ அந்த பாவத்தை நான் அடையகடவேன்.

11. எவன் ஒருவன் நண்பனின் மனைவியை அபஹரிக்கின்றானோ அதனால் வரும் பாவத்தை அடையகடவேன்.

12.எவன் ஒருவன் குருவின் பத்தினி அல்லது அரசனின் பத்தினியை அபஹரிக்கின்றானோ அதனால் வரும் பாவத்தை அடையகடவேன்.

13. எவன் ஒருவன் இரண்டு பெண்களை மணம் செய்து பின் ஒருத்தியை மட்டும் அலட்சியம் செய்வதால் ஏற்படும் பாவம் என்னை அடையட்டும்.

14. எவன் ஒருவன் கதியற்ற தனது பதிவிரதையான பத்தினியை யௌவன வயதில் விட்டுவிடுகிறானோ அவன் அடையும் பாவம் என்னை சூழட்டும்.

15. தாகத்துடன் தண்ணீர் குடிக்க வரும் பசுவை குடிக்கவிடாமல் செய்வதால் வரும் மகா பாவம் என்னை வந்தடையட்டும்.

16. எவன் பிரம்மகத்தி செய்கிறானோ, கள்ளை குடிக்கிறானோ, வ்ரத பங்கம் பண்ணுகிறானோ இப்படிபாட்ட மஹாபாவிகளின் பாவத்தை அடைய கடவேன்.

17. எவன் ஸர்வவ்யாபியாய் (எங்கும் நிறைந்திருக்கும்) எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வாசுதேவனை ஆராதனை பண்ணாமல் இதர தேவதைகளை உபாசிக்கிரானோ அவனது பாவத்தை அடைவேன்.

18. சர்வ ஜனங்களையும் காப்பவனும், எல்லோர் இதயத்திலும் அந்தர்யாமியாய் இருப்பவனும், எல்லா உயிரினங்களையும் இயக்குபவனும் , முக்கோடி தேவர்களாலும் முனிவர்களாலும் ஆராதிக்கப்படுபவனுமான சர்வேச்வரனான அந்த ஸ்ரீமன் நாராயணனையும் மற்றவர்களையும் சமமாக பாவிப்பதால் வரும் பாவம் என்னை அடையட்டும்.

நம்பாடுவான் மேலே சொன்ன பதினாறு ப்ரதிக்ஞைகளை சொல்லும் வரை ப்ரம்மரக்ஷஸ் தனது பிடியை தளர்த்தவில்லை. ஆனால் 17வது ப்ரதிக்ஞையை சொல்லியதுதான் தாமதம் உடனே பிடியை விட்டு விட்டது. அதுவும் 18 ஆவது ப்ரதிக்ஞையை கேட்டதும் நம்பாடுவானது அபார ஞானத்தை புரிந்து கொண்டது. இவன் சாதாரணமான ஆள் இல்லை. இவனை விடாவிட்டால் இன்னும் துயரமே வரும் என்று நம்பாடுவானை விடுவித்து சீக்கிரமே விரதத்தை முடித்துவிட்டு வா என்று சந்தேகத்துடன் அனுப்பியது.

ப்ரம்மரக்ஷஸ்ஸினால் விடப்பட்ட நம்பாடுவான் திருக்குறுங்குடி கோவிலை நோக்கி ஓடினான் ! நம்பியின் கோயிலுக்கு முன் வந்த நம் பாடுவானின் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வந்தது. பெருமாளே ! எங்கே என் ஆயுள் உன்னை பாடாமலேயே முடிந்து விடுமோ என்று அச்சப்பட்டேன். நல்ல வேளை உன்னை பாட வந்து விட்டேன். இதுவே எனது இறுதி பாடலாக இருக்கும் என்று மனம் நெகிழ்ந்து பண்ணிசைத்து உருக்கமாக பாடினான். உள்ளிருந்த நம்பி பெருமாள் நம்பாடுவானின் குரலிலிருந்த சோகத்தை உணர்ந்தார். எதிரே நோக்கினார். ஆம் தான் ஆட் கொள்ளவேண்டிய தனது பக்தனின் முகத்தை தானே பார்க்காவிட்டால், பிறகு அவனுடைய பக்திக்குத் தான் அளிக்குகும் மதிப்புதான் என்ன என்று யோசித்தார். அவன் காண இயலாதிருந்தும் அவனை நாம் பார்த்து ரக்ஷிப்போம் என்று எதிரே பார்த்தார். கொடி மரம் தடுத்தது. " விலகி நில் கொடிமரமே என் பக்தன் என்னைக் காணவேண்டும், அதை விட நான் அவனை காண வேண்டும்! விலகு" என்று தனது பார்வையாலேயே சற்று விலக்கினார்.
"பளிச்சென்று ஓர் ஒளி உள்ளிருந்து வெளியே வந்து நம்பாடுவானை ஆரத் தழுவியது. கொடிமரம் விலகிய கோணத்தில் நேர் எதிரே தான் பார்ப்பது நம்பிதானா என்று உள்ளம் குதூகலித்தான். ஆஹா பெருமாளை நேரில் தரிசிக்கும் பேறு பெற்ற பின் வேறு என்ன வேண்டும். அர்ச்சாவதார மூர்த்தியை நேரில் தரிசனம் கண்டாயிற்று. இந்த ஜன்மம் சாபல்யம் அடைந்துவிட்டது. இனி பிரம்ம ராட்சசனுக்கு மகிழ்வுடன் உணவாகலாம். நம்பாடுவான் என்ற அந்த அற்புத பக்தன் தொடர்ந்து இறைவனைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அந்த சில கண நேர தரிசனத்திலே முழு நிறைவடைந்தான். பேராசையற்ற பக்தி. இறைவனை காண முடியாமல் தன் ஆயுள் முடிந்து விடுமோ என்ற ஏக்கத்தில் இருந்தவனுக்கு இந்த தரிசனமே போதுமானதாக இருந்தது.அதைவிட தான் வாக்கு கொடுத்ததால் பெரும் பசியுடன் இருந்த பிரம்ம ராட்சசனை நோக்கி விரைந்தான்

இப்படியாக தனது விரதத்தை முடித்துவிட்டு ப்ரம்மரக்ஷஸ்ஸிநிடம் செல்ல முற்பட்டான். வந்த வேகத்தை விட செல்லும் வேகம் ஜாஸ்தியாக காணப்பட்டது. அப்போது ஒரு சுந்தர புருஷன் அவன் முன் தோன்றி, "யாரப்பா நீ! எங்கு செல்கிறாய்.? நீ செல்லும் திசையில் ஒரு பிரம்ம ராக்ஷசன் இருக்கிறான்! அங்கே போகாதே : என்று கூறினான். நம்பாடுவானும், "சுவாமி அடியேனுக்கு அந்த ராக்ஷசனை பற்றி தெரியும்; நான் அவனுக்கு என் விரதத்தை முடித்துவிட்டு வருவதாக வாக்களித்துள்ளேன். ஆகவே அங்கு செல்கிறேன் என்று கூறினான். அதற்கு அந்த சுந்தரபுருஷன், நீ நினைப்பது போல் அந்த ராக்ஷசன் நல்லவனில்லை. அவன் உன்னை தின்று விடுவான் வேறு வழியில் சென்று விடு என கூற, நம்பாடுவான் "சுவாமி சத்தியத்தை துறந்து உயிர் வாழ் விரும்பவில்லை, ஆகவே என்னை செல்ல அனுமதியுங்கள் என்று வேண்டினான். பிராணனை விட்டாவது சத்தியத்தை காப்பாற்றுவேன் என்று சொன்ன நம்பாடுவானின் வார்த்தைகளை கேட்டு சந்தோசம் அடைந்த சுந்தரபுருஷன் உனக்கு மங்களம் உண்டாகட்டும் என்று ஆசிர்வதித்துவிட்டு சென்றான். அந்த சுந்தர புருஷன் வேறு யாருமில்லை சாக்ஷாத் வராஹ மூர்த்தியே! நம்பாடுவானையும் நம்பாடுவனால் அந்த பிரம்ம ராக்ஷசையும் ஒருங்கே கடாக்ஷிக்க எண்ணினார்.

நம்பாடுவானும் ப்ரம்மரக்ஷஸ்ஸின் இருப்பிடம் வந்து சேர்ந்தான். இதோ உன் அனுமதியுடன் நம்பி பெருமாளை வாயாரப் பாடி நான் புனிதனாகி வந்துள்ளேன். எனது சரீரத்திலுள்ள ரத்த மாமிசங்களை புசித்து உன் பசியை போக்கிக் கொள் என்று கூறி நின்றான்.

பசியுடன் மிக பயங்கரமாய் இருந்த ப்ரம்மரக்ஷஸ், " ஏ நரனே! நீ நேற்றிரவு சர்வேஸ்வரனை போற்றி பாடிய பாட்டின் பலனை எனக்கு கொடுத்தால் உன்னை விட்டு விடுகிறேன் என்றது. அதற்கு நம்பாடுவான் நான் கொடுத்த சத்தியத்தை காக்கவேண்டும் ஆகவே என்னை புசித்துக்கொள் நான் பாட்டின் பலனை கொடுக்க மாட்டேன் என்றான். அதற்கு ப்ரம்மரக்ஷஸ் பாட்டின் பாதி பலனையாவது கொடு உன்னை விட்டுவிடுகிறேன் என்று மன்றாடியது. அதற்கும் மசியாத நம்பாடுவான் நான் உனக்கு கொடுத்த வாக்கின் படி வந்து விட்டேன் நீ செய்த ப்ரதிக்ஞை படி என்னை புசித்து விடு என்று கூறினான்.
ப்ரம்மரக்ஷஸ்ஸும், "அப்பா ! ஒரு யாமத்தின் பலனையாவது கொடுத்து என்னை ப்ரம்மரக்ஷஸ் ஜன்மத்திலிருந்து காப்பாற்று" என்று மன்றாடியது.
"நீ ப்ரம்மரக்ஷஸ்ஸாகப் பிறக்க காரணம் என்ன?"என்று கேட்டான் நம்பாடுவான்.
அப்பொழுது ப்ரம்மரக்ஷஸ்ஸுக்கு பூர்வஜன்ம ஞாபகம் வந்தது, பூர்வ ஜன்மத்தில் நான் பிராமண குலத்தில் பிறந்து எந்த அனுஷ்டானங்களும் இன்றி திரிந்தேன். பண ஆசையால் யாகம் பண்ண எண்ணினேன். அப்பொழுது எனது பாவத்தின் காரணமாய் யாகத்தின் இடையில் மரணமடைந்தேன். இப்பொழுது ப்ரம்மரக்ஷஸ்ஸாக அலைந்துக் கொண்டிருக்கிறேன். தயை கூர்ந்து என்னை காப்பாற்று என்று நம்பாடுவானை சரண் அடைந்தது. தன்னை அண்டிய அந்த ப்ரம்மரக்ஷஸ்ஸிற்க்கு உதவ முடிவு செய்தான் நம்பாடுவான். அதன்படியே, "நேற்றிரவு "கைசிகம் என்ற பண் பாடினேன். அதனால் வரும் பலனை அப்படியே உனக்கு கொடுக்கின்றேன் அதன் காரணமாய் நீ ராக்ஷச ஜன்மத்திலிருந்து விடுபட்டு மோக்ஷத்தை அடைவாய் என்று கூறினான். நம்பாடுவானின் வரத்தை பெற்ற ப்ரம்மரக்ஷஸ் ராக்ஷச ஜன்மத்திலிருந்து விடுபட்டு நல்ல குலத்தில் பிறந்து பகவத் பக்தனாக இருந்து மோக்ஷத்தை அடைந்தது.

நம்பாடுவானும் நெடுங்காலம் நம்பிபெருமாளை போற்றி பாடி மோக்ஷத்தை அடைந்தான். ஸ்ரீ ரங்கத்தில் ரங்கனை அன்றாடம் ஆராதித்து வந்த பராசர பட்டர் என்பவர் இந்த புராணத்தை தெளிவாக விளக்கியதை கேட்டு சந்தோசமடைந்த அரங்கன் பராசர பட்டருக்கும் பரமபதத்தை தந்து தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.

ஒவ்வொரு கார்த்திகை மாதம் சுக்லபக்ஷ ஏகாதசி அன்று எல்லா வைஷ்ணவ கோயில்களிலும் இந்த மகாத்மியம் இன்றும் வாசிக்கபடுகிறது. அப்பேற்பட்ட கைசிக மகாத்மியத்தை கோயிலுக்கு சென்று பெருமாள் முன்னோ அல்லது வீட்டில் பூஜை அறையில் பெருமாள் முன் சொல்கின்றவனும் அதை கேட்கின்றவர்கள் யாவரும் இந்த லோகத்து ஐஸ்வர்யங்கள் அனைத்தையும் அனுபவித்து பின் வைகுந்தத்தையும் அடைவர் என்று பூமி பிராட்டிக்கு வராஹ பெருமாளே சொன்ன சத்தியம் இது.

ஆகவே அன்பர்கள் அனைவரும் இந்த மஹாத்மியத்தை படிக்க கொடுத்துவைத்தவர்கள். உங்களுக்கு எம்பெருமானின் பரிபூர்ண அனுக்ரஹம் உண்டாகட்டும்

No comments:

Post a Comment